search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பணிகள்"

    அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    அரக்கோணம்:

    மைசூரில் இருந்து சென்னை கார் கம்பெனியில் கார்களை ஏற்றுவதற்காக சரக்கு ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் வந்தது.

    அங்குள்ள யார்டு லைன் அருகே வந்தபோது சரக்கு ரெயிலில் 5 மற்றும் 6-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இது பற்றி அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பெங்களூரில் இருந்து வந்த காவேரி எக்ஸ்பிரஸ், கேரளவில் இருந்து வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தபட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

    சென்னை மண்டல மேலாளர் மகேஷ், அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    தடம்புரண்ட பெட்டிகளை கழட்டி விட்டு மற்ற பெட்டிகள் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 1½ மணி நேரத்துக்கு பிறகு காவேரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதன்பிறகு வந்த ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

    தடம் புரண்ட ரெயில் பெட்டியை சீரமைக்க கிரேன் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ரெயில்வே பணிகளில் நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த மணவாளன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரெயில்வே பாதையில் கடந்த 8-ந் தேதி, 2 ரெயில்கள் எதிரெதிரே இயக்கப்பட்டு, பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. மொழிப்பிரச்சினை காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிகழ்வு ரெயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

    பொதுவாக ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளிலேயே நடைபெறுகிறது. எனவே பணிக்கு தேர்வாகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் ரெயில்வே ஊழியர்கள் பலர் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர்.

    தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உள்பட அந்தந்த பிராந்திய மொழி பேசும் மாணவர்கள் ரெயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை.

    தமிழகத்தில் ரெயில்வேயின் முக்கிய பொறுப்புகளில் இருப்போருக்கு பெரும்பாலும் தமிழ் தெரிவதில்லை. கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரெயில் பாதையில் மேற்கண்ட நிகழ்வு நடைபெற்றபோது, தொலைத்தொடர்பிலும் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்டுகள் பணியாற்றும் நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை.

    எனவே தமிழ் மொழி தெரிந்தவர்களை தமிழக ரெயில்வே பணிகளில் அமர்த்த வலியுறுத்தி ரெயில்வே யூனியன்கள் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

    எனவே, ரெயில்வே துறை பணிகளில் குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், கார்ட்ஸ், பாய்ண்ட்ஸ்மேன் உள்ளிட்ட முக்கிய பணிகளில் தமிழகத்தில் தமிழ்மொழி தெரியாத நபர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    ×